search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த தான விழிப்புணர்வு"

    திண்டுக்கல்லில் தாலி கட்டும் முன் மணமக்கள் ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #BloodDonation
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கும் அனுமோனிஷா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மணமகன் ஹரிஹரனும், மணமகள் அனுமோனி ஷாவும் மேடைக்கு அருகிலேயே ரத்ததானம் செய்தனர்.

    இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

    இது குறித்து ஹரிஹரன் கூறுகையில், அனுமோனி ஷாவின் தந்தை பாஸ்கரன் 110 முறை ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவரது தாயாரும் செவிலியருமான ரமாதேவி 70 முறை ரத்ததானம் செய்துள்ளார்.

    வாழ்க்கை முழுவதும் ரத்ததானம் செய்வதையே தங்கள் லட்சியமாக வைத்துள்ள குடும்பத்தில் பெண் எடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

    நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். பல திருமண விழாக்களில் இயற்கையை போற்றவும், மழைநீரை சேமிக்கவும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்குவதை பார்த்துள்ளோம்.

    அதுபோல ரத்த தானமும் சமூகத்திற்கு தேவையான மிகச்சிறந்த சேவையாகும். ரத்தத்தில் ஜாதி இல்லை, மதம் இல்லை, வகைகள்தான் உள்ளது. எனவே என்னைப் போல மற்ற திருமண விழாக்களிலும் மணமக்கள் ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

    மணமக்களின் இந்த செயலை பார்த்து திருமண விழாவிற்கு வந்த 35-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். விழாவில் காஷ்மீர் மாநிலத்தில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மணமக்கள் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்ததானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வினோதமான முறையில் நடந்த இந்த திருமண விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
    ×